
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'பேசும் படம்' படத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் சினிமாவில் வசனங்களே இல்லாமல் மவுன படமாக வெளிவந்திருக்கும் படம் 'மெர்குரி'. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில் பிரபுதேவாவுடன், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சைலண்ட் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க இசையை வைத்து காட்சிகளை நகர்த்திய இப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இப்படத்தை பார்த்த அனுபவத்தை பற்றி பேசும்போது....'பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் இது ஒரு சிறந்த படம்' என்று பாராட்டியுள்ளார். ரஜினியின் இந்த வாழ்த்தால் 'மெர்குரி' படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.