சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.
அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது மூத்த மகளான இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இளைய மகளான சௌந்தர்யா இயக்கத்திலும் ரஜினி நடிக்கவுள்ளதாக முனுமுனுக்கப்படுகிறது. ரஜினிகாந்த் த.செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.