இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. மேலும் சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்டிக் பாண்டியன் (துணைக் கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடவுள்ளனர். இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை சென்னை, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இப்போட்டியைக் காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து உலகக் கோப்பை 2023க்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். இது குறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "சினிமாவைத் தாண்டிய ஒரு நிகழ்வு இது, சினிமாவின் ஆஸ்தான உருவமாகவும், மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரை பதித்தவர் ரஜினிகாந்த். ஐசிசி 2023 உலகக் கோப்பையில் தலைவர் (ரஜினி) எங்களின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். அவரின் முன்னிலையில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியைக் காண்பிப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்." எனப் பதிவிட்டிருந்தது.