ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ல் படம் வெளியாகவுள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
அப்போது ரஜினி பேசுகையில், இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்பு படம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினார். பின்பு விஜய் பற்றி பேசிய அவர், “விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். அவர் வீட்டில் தர்மத்தின் தலைவன் பட ஷூட்டிங்கின் போது, விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். ஷூட்டிங் முடிந்ததும், சந்திரசேகர் விஜய்யை அறிமுகப்படுத்தினார். ‘படிச்சிக்கிட்டே ஆக்ட் பண்றான், அதனால் நீங்க படிக்க சொல்லுங்க’ எனக் கேட்டுக் கொண்டார். நானும் விஜய்யிடம், ‘நல்லா படிப்பா பெரிய நடிகரா வரலாம்’ என்றேன். அதுக்கப்புறம் விஜய் நடிக்க வந்து அவரது திறமை, உழைப்பால் படிப்படியா முன்னேறி இப்போது எங்கோ ஒரு இடத்தில் உள்ளார். அடுத்ததாக அரசியல், சமூக சேவைக்கு போக வேண்டும் என நினைக்கிறார்.
இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டி என சொல்லும்போது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜய்யே சொல்லியிருக்கிறார், அவருக்கு போட்டி அவர்தான் என்று. நானும் என் படத்திற்கு நான்தான் போட்டி என்று சொல்லியிருக்கேன். விஜய் வந்து எனக்கு போட்டி, அப்படின்னு நான் நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை. விஜய்யும் நான் அவருக்கு போட்டி என நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை. தயவுசெய்து இரண்டு பேரையும் ரசிகர்கள் ஒப்பிடாதீங்க. இந்த காக்கா கழுகு கதையெல்லாம் பண்ண வேண்டாம். அதை நிப்பாட்ட வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்” என்றார்.