ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி கடந்த 26ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்தால் அவர், லால் சலாம் போன்ற படத்தில் இருந்திருக்க மாட்டார். படத்தைப் பார்த்தால் அது புரியும். ஒரு சங்கியால் இந்தப் படத்தை பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதியால் மட்டும் தான் இது போன்ற ஒரு கதையில் நடிக்க முடியும்” என்றார்.
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஆந்திரா செல்கிறார் ரஜினி. அதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது தொடர்பான கேள்விக்கு, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை. லால் சலாம் படம் நல்லா வந்திருக்கு. மதநல்லிணக்கத்தை சொல்லியிருக்காங்க” என பதிலளித்தார்.