கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசுக்கும், மக்களுக்கும் மற்றும் திரையுலகினருக்கும் நிதியுதவி அளித்து வருகிறார். இதற்கிடையே 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் திறக்கப்பட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மதுகுடிப்பவர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''நண்பர்களே, ரசிகர்களே, தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் வெளியே குவிந்த மக்களைப் பார்த்த பிறகு, என்னுடன் சேவை செய்து வரும் என் அம்மாவும், இன்னும் சிலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். 'நாம் கடுமையாக உழைத்து மற்றவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இவர்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா..?' என்று கேட்டனர். என் அம்மா, நண்பர்கள் மட்டுமல்ல, நாம் சரியானவர்களுக்குத்தான் சேவை செய்கிறோமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் நான் இதை அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
குடும்பத்தில் ஒருவர் குடிக்கிறார் என்பதற்காக நாம் சேவையை நிறுத்தினால் அந்த நபரின் அம்மா, மனைவி, குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள். பல குடும்பங்களுக்கு வீடே இல்லை. குடிப்பவர்களைத்தான் நாம் செய்திகளில் பார்க்கிறோம். ஆனால் நிறைய ஆண்கள் குடிக்காமல் தனது குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக் கஷ்டப்படுகின்றனர். அதனால் தயவுசெய்து உதவுவதை நிறுத்தாதீர்கள். மது குடிப்பவர்கள் அனைவருக்கும் என் சிறிய வேண்டுகோள். குடிப்பதற்கு முன் பசியால் வாடும் உங்கள் குழந்தையின் கண்ணீரை நினைத்துப் பாருங்கள். நேர்மறை சிந்தனையைப் பரப்புவோம். சேவையே கடவுள்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.