இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தை ‘படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக உருமாறி வரும் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வருகிற ஃபிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. மணிரத்னம், படத்தில் நடித்த ராதிகா, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ராதிகா, “நான் இயக்குனர் தனாவை வாழ்த்துகிறேன். முதலில் இந்த படத்தில் நானும் சரத்குமாரும் நடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டவுடன் முதலில் சரத்தான் படத்தின் கதை கேட்டுவிட்டு, நன்றாக இருக்கிறது என்றார். அதன்பின் நான் படத்தின் கதையை கேட்டேன். தனாவுக்கு இந்த கதையை மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மிகவும் உணர்ச்சிகரமாக அந்த கதையை எனக்கு சொன்னார். நாங்கள் நிறைய படங்கள் பண்ணிட்டோம். அவர்கள் பேசும்போதே அவர்கள் எந்தமாதிரியாக பேசுகிறார்கள் என்பதுகுறித்தான புரிதல் எங்களுக்கு இருக்கும். ஒவ்வொரு படத்தின் களம் வேறு, இந்த மாதிரி புரிதலுடன் இருக்கும் களத்தில் நடிப்பது வேறு.
மணி தெரியாத்தனமாக என்னை பரதநாட்டிய டான்ஸராக அவருடைய இரண்டாவது படத்தில் போட்டுவிட்டார். அவர் பட்ட கஷ்டம் அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். அவர் அழுதுவிட்டார். ஒரு பாயிண்டிற்கு பின்னர் தற்போதும் அவர் அழுதுகொண்டிருக்கிறார். நானும் அவரிடம் கேட்டேன் ஏன் என்னை பரதநாட்டிய டான்ஸராக நடிக்க வைத்தீர்கள் என்று. அவர் அதற்கு இட்ஸ் ஓக்கே என்று பதிலளித்தார். அதன்பின் அவருடைய அனைத்து கதைகளிலும் நான் தான் நடிக்க வேண்டும் என்று நினைப்பார். இந்த ஐஸ்வர்யா ராய் என்னைவிட இரண்டு இன்ச் என்னைவிட கம்மி என்பதால் அவரை வைத்தே படம் எடுத்துவிட்டார். இப்போது கூட அவரிடம், பொன்னியின் செல்வன் படத்தில் நான் பெட்டராக இருப்பேன் என்று சொன்னேன் . மீண்டும் ஏதோ இரண்டு இன்ச் வித்தியாசத்தில் என்ன தவிர்த்துவிட்டார் மணி” என்று கூறினார்.