Skip to main content

“இளையராஜாவும் முன்னாள் பிரதமரும் ஒன்னு, உம்முனுதான் இருப்பாங்க”- ராதாரவி பேச்சு

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார் ராதாரவி. 
 

radharavi

 

 

அதில், “இளையராஜாவும் - முன்னாள் பிரதமரும் ஒன்னு. இருவரும் அவரும் என்ன பண்ணாலும் உம்முனுதான் இருப்பார்கள். என்ன காமெடி பண்ணினாலும் சிரிக்கவே மாட்டார் இளையராஜா. ஆனால், இளையராஜாவை அதிகமாகச் சிரிக்க வைத்தது நான்தான். பாரதிராஜாவின் தம்பி மகன் திருமணத்தில் இளையராஜா அண்ணனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவ்வளவு சிரித்தார். லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது, நான் எடுத்த 4-வது படத்துக்கு 25 ஆயிரம் சம்பளத்துக்கு வாசித்துக் கொடுத்தார்.

மலேசியா போயிருந்தேன். மலேசியாவில் தயாரான தமிழ்ப் படத்தில் நடிக்கச் சென்றேன். பாஸ்போர்ட் வைத்துச் சென்றபோது, டூரிஸ்ட்டா என்று கேட்டார்கள். ஆமாம் என்றேன். 2 நாட்களுக்குப் பிறகு என்னைப் பிடித்துவிட்டார்கள். நடிக்க வந்துவிட்டு, ஏன் அதற்கான அனுமதி வாங்கவில்லை என்று திரும்ப அனுப்பிவிட்டார்கள். பின்பு அதற்கான அனுமதி வாங்கிவிட்டுத்தான் சென்றேன். அப்போது தான் நம்மை இவ்வளவு துன்புறுத்துகிறார்களே, இவர்களுக்கெல்லாம் ஒரு சட்டம் வராதா என நினைத்தேன். இப்போது தான் குடியுரிமைச் சட்டம் வந்துள்ளது.

3 வருடம்தான் வேலை என்று துரத்திவிடப்பட்டவர்கள், இங்கு வந்து இந்தச் சட்டம் தவறு எனக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டில் இருப்பவர்கள் வாடகை கொடுக்கவில்லை என்றால், நான்தான் சண்டை போட்டுத் துரத்திவிடுவேன். அதில் எதிர்வீட்டுக்காரன் தலையிட வேலையே இல்லை. இங்கிருப்பவர்கள் யாரையாவது வெளியே போகச் சொன்னார்களா? அமைதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தேர்தல் வந்து தொலைஞ்சுடுச்சு. இந்தச் சட்டத்துக்கு யாரெல்லாம் முதலில் ஆதரவு கையெழுத்துப் போட்டார்களோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்ப்புக் கொடி பிடித்து நிற்கிறார்கள். ஒரு ஆள் கூட கேட்கவில்லை. இது நாதியற்ற தமிழ்நாடு. நாதியுள்ள தமிழ்நாடாக மாற, நல்லவர்கள் வரவேண்டும்” என்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்