கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இதில் நிக்கி கல்ராணி, ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து ரிலீஸுக்கு தயாரக இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டார்கள்.
அப்போது நடிகர் ராதாரவி பேசுகையில், “ராதாரவி பேசினாலே சர்ச்சை என்கிறார்கள். அது புரியாதவர்களுக்குதான் சர்ச்சை. புரிந்தவர்களுக்கு அது நல்ல பேச்சுதான். இந்த படத்தின் இயக்குனர் கதிர் ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தவர். இந்த படத்தில்தான் ஹீரோ சக நடிகர்களின் தேதிகளுக்கு ஏற்றார்போல கொடுத்திருக்கிறார். சசி படத்தில்தான் வீரனாகவும், சூரனாகவும் நடிக்கிறாரே தவிர ரொம்ப தங்கமான பிள்ளை அவர்.
ஆனால், சினிமாவுக்கு லாயிக்கில்லாத மனிதர் சசிகுமார். தலையைக் குனிந்துக் கொண்டே நடந்து போவார். ஹீரோ என்றால் பந்தாவாக நடந்து செல்ல வேண்டாமா? நான் எல்லாம் அப்படியே பார்த்து பழகிவிட்டேன். அதனால் இவரை பார்க்கும்போது அசிங்கமா இருக்கிறது. இப்போதுள்ள ஹீரோக்கள் எங்கே போனாலும் பாடிகார்ட்ஸுடன் தான் வருகிறார்கள். அதனால்தான் அவருடைய படத்தை பார்க்க கூட்டம் இருக்கிறது என்று மக்கள் கூட்டம் வருவது இல்லை. நிறைய பாடிகார்ட்ஸ் இருக்கவும், ஓஹோ அவருக்கு நம்ம தேவையில்லை போல என நினைத்துவிடுகிறார்க்ள். புரட்சித் தலைவர் பாடிகார்ட்ஸோடு வந்து பார்த்திருக்கிறீர்களா? அவரை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அதேபோல சிவாஜி கணேசன் எந்த பாடிகார்ட்ஸும் வைத்துக்கொள்ளவில்லை. தற்போதைய நடிகர்கள் போல பந்தா பண்ணாமல், மிகவும் எளிமையாக இருக்கிறார் சசிகுமார்” என்றார்.