Skip to main content

‘விக்ரம் வேதா’வுக்கு பிறகு அடுத்து என்ன படம்னு கேட்டாங்க, இதுதான் அவங்களுக்கு பதில் - புஷ்கர் & காயத்ரி பேச்சு

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Pushkar Gayathri

 

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் வரும் 17ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் புஷ்கர் & காயத்ரி பேசுகையில், ''முதலில் இந்தத் தொடரின் கருவை மட்டும் தான் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார். அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

 

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களைச் சந்திக்கும் பலரும், அடுத்து என்ன என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்தத் தொடர்தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தொடர் முதலில் இந்திய மொழிகளில்  வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

 

இந்தத் தொடரை இயக்கிய இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள். கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி என அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினார்கள்.

 

தமிழ் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள்  இந்தத் தொடருக்காக கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனை தொடங்கி வைத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினர். 

 

 

சார்ந்த செய்திகள்