Skip to main content

கடைசிவரை சரியாகவே பயன்படுத்தல... பெரும் கலைஞன் பாலா சிங்!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிற படைப்பாளிகள் மரணமடையும்போது பலரும் சொல்வது அவர்கள் உயிருடன் இருக்கும்போது சரியாகக் கொண்டாடப்படவில்லை, கௌரவிக்கப்படவில்லை என்பதுதான். இது பெரும்பாலும் எழுத்தாளர்களின் மரணத்தின்போது  நிகழும். இன்று காலை மரணமடைந்த நடிகர் பாலா சிங்கின் விஷயத்தில் இது வேறு விதமாக இருக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர் என்று தெரிந்தும் ரசிகர்கள் அவரை விரும்பியும் தமிழ் சினிமாவில் அவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லலாம். 
 

bala singh

 

 

இவர் மலையாளத்தில் நடித்து பின்னர் 'அவதாரம்' என்னும் தமிழ் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும், தன்னுடைய கண்ணில் அத்தனை குரூரத்தையும் வெளிகாட்டியிருப்பார். அவதாரம் படத்தை பார்ப்பவர்களுக்கு அச்சமூட்டும் ஒரு வில்லனாக நடித்திருப்பார். அவர் படங்களில் நடிப்பது குறைவு, அப்படி நடிக்கும் படங்களில் வரும் அவரது காட்சிகளும் குறைவு என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பெறும் வகையில் தன்னுடைய நடிப்பின் மூலம் காந்தத்தைப்போல ஈர்க்கும் தன்மை அவருக்கு உண்டு.

அவருடைய நடிப்புத் திறமையை முழுமையாக ரசிகர்கள் பலரும் உணர்ந்தது என்றால் ’புதுப்பேட்டை’யில் வரும் ’அன்பு’ கதாபாத்திரத்தின் மூலம்தான். வடசென்னையிலுள்ள ஒரு எம்.எல்.ஏ கேண்டிடேட் ரௌடிகளை மேனேஜ் செய்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மூர்த்தியை எப்படி சமாளித்து கட்சி வேலைகளை செய்கிறார் என்பதுதான் அவருடைய கதாபாத்திரம். குறிப்பாக இதில் பாலாசிங் பேசும் வசனங்கள், அவருடைய பாடி லாங்குவேஜ் எல்லாமே ரசிகர்களுக்கு அத்துப்படி. பள்ளி மாணவனாக இருந்த தனுஷ் ரௌடி கும்பலுடன் சேரும்போது பாலாசிங்கை பார்த்து  ‘சார்’ என்று கூறுவார். ‘நன்கு படித்து அதிகாரத்தில் இருப்பவர்களைதான சார் என்று அழைப்பார்கள், இவன் என்னை அப்படி அழைத்திருக்கிறானே’ என்று ஃபீல் செய்வதை ஒரு நொடியில் தன் கண்ணால் நடித்துக் காட்டியிருப்பார். இதுபோல ”அது தாங்காது”, ”அதுவும் சரிதான்” போன்ற சின்னச் சின்ன வசனங்கள் எல்லாம் படத்தில் ஹைலைட். ’இந்தியன்’ படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரியாக வரும்போதும் அவருடைய நடிப்பு நம்மை வெறிகொள்ள வைக்கும். அவர் நடித்த அனைத்து படங்களிலுமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படமான என்.ஜி.கேவிலும் அவரது நடிப்பும் வசனங்களும் கைதட்டல் பெற்றன.

என்னதான் அவர் பல நாடக மேடைகளிலும், கூத்து மேடைகளிலும் தன்னுடைய நேரத்தை செலவு செய்தாலும் திரைப்படங்களில் இன்னும் அதிகமாக நடிக்கவே விரும்பினார். இதை அவரது பேட்டிகளில் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

பாலாசிங், தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு நல்ல குணச்சித்திர நடிகர்!

 

சார்ந்த செய்திகள்