Skip to main content

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வழக்கு - கோரிக்கையை ஏற்ற நீதிபதி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Producers' Association Election Case court adjourn the hearing of the case to the 15th.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 26.3.2023 அன்று நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலின் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட சில குறிப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக யாரை நியமிப்பது என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை கவுன்சிலே முடிவு செய்து தேர்தலை நடத்த முடியாது" என வாதிட்டார். தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் நடத்தும் அலுவலராக யாரை தேர்வு செய்துள்ளார்கள் என்ற தகவலைக் கூற அவகாசம் வேண்டும்" எனக் கோரினார். இதையடுத்து வரும் 15 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்