கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இயக்கி அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘எனக்கு என்டே கிடையாது’. தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப் போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.
விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது. படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும். எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைப்பிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன்.
சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதனம் தான். இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.