![Producer Kannanravi](http://image.nakkheeran.in/cdn/farfuture/tfVnPLUaguTw-guvgqHkHz3u9JM5AIHaOb3z4OMH-v0/1683619418/sites/default/files/inline-images/K_1.jpg)
ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 12 ஆம் தேதி (12.05.2023) வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி துபாயில் இயங்கி வரும் கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தமிழ்நாட்டின் திட்டக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த இவர் சாதாரண தொழிலாளியாக துபாய் சென்று இன்று கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் அளவிற்கு கடும் உழைப்பால் உயர்ந்துள்ளார்.
அங்குள்ள தமிழர்களுக்கு நிறைய உதவிகளையும் நற்பணிகளையும் செய்து வருகிறார். இவர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் தீவிர ரசிகர் ஆவார். கண்ணன் ரவிக்கு தனிப்பட்ட சிக்கல் உருவான போது அதனை பாக்யராஜ் தலையிட்டு சரி செய்ததாகவும், அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அவரது மகனை கதாநாயகனாக வைத்து படம் தயாரித்ததாகவும் கூறியுள்ளார்.
துபாயில் நற்பெயரை சம்பாதித்துள்ளதைப் போல தனது சொந்த ஊரான திட்டகுடிக்கும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் இவர் தயாரித்து வெளியாக உள்ள ராவண கோட்டம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவரது சொந்த ஊரில் சுவரொட்டிகளும் பதாகைகளும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.