தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் அமேசான் ப்ரைமில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா, பாலிவுட் திரையுலகம், ஆர்.ஆர்.ஆர் படம் உட்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். பாலிவுட் குறித்து பேசுகையில், "பாலிவுட்டில் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அங்கு இருப்பவர்களிடம் எனக்குப் பிரச்சனை இருந்தது. அங்கு நடக்கும் அரசியலிலிருந்து நான் ஓய்வெடுக்க முடிவெடுத்தேன்" என்றார்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை பற்றி பேசுகையில், "பெரிய ஸ்டூடியோக்கள், ஐந்து நடிகர்கள், இவர்களால் பெரிய படங்கள் உருவாகும். பாலிவுட் நம்ப முடியாத வகையில் மாறியுள்ளது. பெரியளவில் ஆக்ஷன் காட்சிகள் காதல் கதை மற்றும் நடனம் உள்ளது" என்றார். குறுக்கிட்ட நெறியாளர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை பற்றி கேட்டார். அதற்கு, "ஆர்.ஆர்.ஆர் ஒரு தமிழ்ப் படம். மிக பெரிய பிளாக்பஸ்டர் தமிழ் படம். இது எங்களின் அவெஞ்சர்ஸ் படம் போன்றது" என்றார்.
பிரியங்கா சோப்ராவின் பதில், தெலுங்கு ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. உலக அளவில் ஆஸ்கர் பெற்று கவனம் ஈர்த்த ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழ் படம் என அவர் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெலுங்கு ரசிகர்கள் ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ் படம் அல்ல தெலுங்கு படம் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கர் வெல்வதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் இப்படத்தை திரையிட்டபோது அதை கண்டுகளித்து படக்குழுவினரை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.