துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவு, 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவு, 4வது முறையாக 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 5,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இந்த நிலைமை சரியாகவும் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரைப்பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், நடிகை ப்ரியா ஆனந்த், "துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மிருனாள் தாக்கூர், "இது மிகவும் மனவேதனை அளிக்கிறது. கடவுளே, தயவு செய்து கருணை காட்டுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். நடிகை ஆத்மிகாவும் சிரியா மற்றும் துருக்கி மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டிருந்தார்.
பாடலாசிரியர் வைரமுத்து, "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும். கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.