திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராமர், ஆஞ்சநேயர், அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகம் அகியவற்றின் முந்தைய,மற்றும் தற்போது இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நாடு எங்கே செல்கிறது”’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆனால் இந்த சிலையில் உள்ள சிங்கத்தின் பற்கள் வெளியே ஆக்ரோஷமாக தெரிவதாகவும், அதனால் இந்த சிலை பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக எதிர் கட்சியினர் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜும் அதனையே சுட்டிக்காட்டி உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.