கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குபின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தன் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து, அவர்களுக்கு விடுமுறை அளித்தார்.
மேலும் தனது பிறந்த நாளன்று வீடின்றி தவித்துக் கொண்டிருந்த கூலி பணியாளர்களுக்கு தங்க இடம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பணம் உதவியும் செய்தார். இதையடுத்து அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படவே, தனது அறக்கட்டளை மூலம் நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை அவர் செய்து வரும் நிலையில், தன் பொருளாதார நிலை குறித்து தற்போது சமூகவலைதளத்தில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். அதில்...
"என்னிடம் பொருளாதாரம் குறைவாக உள்ளது. ஆனாலும், கடன் வாங்கி தொடர்ந்து இப்பணிகளை செய்வேன். ஏனென்றால்... என்னால் மறுபடியும் சம்பாதிக்க முடியும் என்று எனக்கு தெரியும்... இந்த கடினமான தருணத்தில் மனிதநேயம் வாழ வேண்டும். ஒன்றிணைந்து போராடுவோம், அதற்கு மீண்டும் உயிர் கொடுப்போம். இது ஒரு பிரகாஷ் ராஜ் அறக்கட்டளையின் முன்னெடுப்பு" என பதிவிட்டுள்ளார்.