ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதன் காரணமாகத் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.
இதனிடையே ஆஸ்கருக்கு அடுத்தபடியாக திரைத்துறையில் கருதப்படும் கோல்டன் குளோப் விருது அடுத்த மாதம் 10ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த விருதுக்காக இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் சிறந்த பாடல் பிரிவில் அப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடலும் தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் ராஜமௌலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ.பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பிரபாஸும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபாஸ் தெரிவித்திருப்பது, "ராஜமௌலி, இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான எல்.ஏ. பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள். சிறந்த இசையமைப்பாளருக்கான எல்.ஏ. ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாஸின் இந்தப் பதிவிற்கு ராஜமௌலி, "தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாதபோது நீங்கள் நம்பினீர்கள்" என கமெண்ட் செய்துள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுக்குத் தேர்வாகியுள்ளது தொடர்பாகவும் வாழ்த்தியுள்ளார். ராஜமௌலி மற்றும் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.