பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. இதனிடையே இந்த டீசர் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள், பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் என பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபாஸ்,“‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முதலில் 3டி எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான செய்திகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.