எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சிருக்கும் வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் கவுர். இதனைத் தொடர்ந்து கமலின் 'உன்னை போல் ஒருவன்' படத்தில் 'அனு' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'பயணம்', விஷாலின் 'வெடி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் 'பாரத் ஜோடோ யாத்ரா' பாதயாத்திரையில் அவருடன் கலந்து கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோய் உடல்சோர்வு, தூக்கம், ஞாபகமறதி, மனநிலை மாற்றம், தசைவலி ஆகிய பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் மயோசிடிஸ் (Myositis) என்ற அரிய வகை தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தாவை போல் பூனம் கவுரும் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது திரையுலகில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.