கிருஷ்ணகிரி அருகே சென்னசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவர் 'பூ போன்ற காதல்' என்ற தலைப்பில் உருவான படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் சமீபத்தில் இப்படம் திரையரங்கில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் மன வேதனை அடைந்துள்ளார். இதனால் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சுரேஷ் மன வேதனையுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், "எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. இந்த படத்தை முடிச்சு சென்சார் சான்றிதழ் வாங்க கூட 5 லட்சம் கடன் வாங்கினேன். கடன் பிரச்சனை ரொம்ப உள்ளது. இந்த படத்தை நம்பி தான் இருந்தேன். ஆனால் 20 டிக்கெட் கூட உள்ளே வரவில்லை. இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர் வாழ முடியாது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நிறைய பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கேன்.
நிறைய பேர் உதவியிருக்காங்க. அவர்களுக்கு ரொம்ப நன்றி. நாளைக்கு நான் கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டேன்" என அழுதுகொண்டே உருக்கமாக பேசியுள்ளார். மேலும் உயிரோடு இருப்பதற்கு ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரை குறிப்பிட்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு முன்னாள் இந்த செய்தியை போட்டால் இந்த படத்தை பார்க்க எப்படியும் 100 பேர் வருவார்கள். அப்போதுதான் எனது பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீரும் எனவும் பேசியுள்ளார்.