'லைகா' நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட வெளிநாடு இசைநிகழ்ச்சி ஒன்றில் 'பொன்னி நதி' பாடலை ஏ.ஆர் ரஹ்மான் பாடினார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 1' படக்குழு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன் படி ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்ப வசதி கொண்ட திரையரங்குகளில் இந்தியாவில் மிக குறைவே.
இதுவரை இந்தியாவில் தூம் 3, பேங் பேங், பாகுபலி 2, பத்மாவத், சாஹோ, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, ஷம்ஷேரா உள்ளிட்ட சில படங்கள் மட்டும் தான் இந்த பார்மட்டில் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் ஐமேக்ஸ் வசதி கொண்ட திரையரங்குகளில் வெளியானது, ஆனால் ஐமேக்ஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இப்படம் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.