Skip to main content

பொன்னியின் செல்வன் போஸ்டரில் இருக்கும் வால் நட்சத்திரத்தின் கதை தெரியுமா?  

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

அமரர் கல்கியின் எழுத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவல் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானோரால் வாசிக்கப்பட்டு, வாசகர்கள் என்பதையும் தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறது. இந்தக் கதையை படமாக எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை முயற்சி செய்து, கைவிட்டுவிட்டனர். இயக்குனர் மணிரத்னம் பல வருடக் காத்திருப்பிற்குப் பின் தற்போதுதான் இந்த நாவலை படமாக எடுத்து வருகிறார். தாய்லாந்தில் இப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் இந்தப் படத்தில் யார் யார் பணி புரிகிறார்கள் என்கிற அப்டேட்டும் வெளியாகியுள்ளது. 
 

unti

 

 

இந்நிலையில் புத்தாண்டையொட்டி 'பொன்னியின் செல்வன்' டைட்டில் டிசைனை வெளியிடவிருப்பதாக 'பொன்னியின் செல்வன்' படத்தை தயாரிக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்து பின்னர் நேற்று 'டைட்டில் லுக்'கை வெளியிட்டது. அதில், புலி சின்னம் பொறிக்கப்பட்ட வாள் ஒன்று இருக்கிறது. இது சோழர்களின் கதை என்பதால் சோழர்களின் சின்னமான புலிகள் பொறிக்கப்பட்ட வாள் வைத்திருக்கிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் சிலர் இதை கொலை வாள் என்று குறிப்பிடுகிறார்கள். நாவல்படி கொலைவாளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. என்னடா இது ஒரு சின்ன டைட்டில் டிசைன் அதுல இவ்வளவு குறியீடு சொல்லிட்டு இருக்கீங்கனு யோசிக்கலாம். அந்த போஸ்டரை நன்கு கவனித்தீர்கள் என்றால் கத்திக்குப் பின்னால் ஒரு வால் நட்சத்திரம் தெரியும். பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குத் தெரியும், அந்த வால் நட்சத்திரம் என்பது எவ்வளவு பெரிய குறியீடாகக் கதை முழுவதும் நகரும் என்று. பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் அந்த வால் நட்சத்திரம் குறித்துத் தெரிந்துக்கொள்ள, நாவலில் வால் நட்சத்திரம் பற்றி வரும் சில பகுதிகளை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

'சுழற்காற்று' என்னும் இரண்டாம் பாகத்தில் 'நடுக்கடலில்..' என்னும் அத்தியாத்தில் வால் நட்சத்திரம் குறித்து வந்தியத்தேவனும் பூங்குழலியும் பேசிக்கொள்வது...

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்.

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.   

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே!"    

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."    

"நீ என்ன சொல்லுகிறாய்?"    

"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்." சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.


கொலைவாள் என்னும் மூன்றாம் பாகத்தில் பிரம்மாவின் தலை என்னும் அத்தியாயத்தில் வால் நட்சத்திரம் குறித்து வந்தியத்தேவனும் சோதிடரும் பேசிக்கொள்வது.

வந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பி, "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?" என்று வினவினான். 

"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.    

வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.


இதுபோல பொன்னியின் செல்வன் நாவலிலுள்ள ஐந்து பாகத்திலும் வால் நட்சத்திரம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாகவே பழங்கால அரசர் கதைகளில், உண்மை வரலாறுகளில் வால் நட்சத்திரம் தெரிந்தால் அதை சுற்றியிருக்கும் அரச குலத்திற்கு ஏதோ கேடு நடக்க இருக்கிறது என்பது நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் உள்ள வால்நட்சத்திரத்தை 'டைட்டில் லுக்' போஸ்டரில் பயன்படுத்தியிருக்கிறார் மணிரத்னம். ஏற்கனவே அவரது சில படங்கள் புராணங்களின் அடிப்படையிலான கதை கருவை கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதுவும் நேரடியாக அந்தக் காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டவை அல்ல. இந்த முறை மன்னர் காலத்துக் கதையாக, மிக பிரம்மாண்டமாக தனது நெடுநாள் கனவுப் படத்தை எடுத்து வருகிறார் மணிரத்னம். 'அந்த வாள் சோழர் காலத்து வாள் அல்ல', 'கைப்பிடி இல்லாத வாளைக் கொண்டு எவ்வாறு சண்டையிட முடியும்' என அந்த டைட்டில் லுக்குக்கே பல விமர்சனங்களும் வந்துள்ளன. எப்படி பார்த்தாலும் தமிழ்த் திரையுலகே எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெருங்கனவுப் படம் 'பொன்னியின் செல்வன்'. அதுவும் தெலுங்கு சினிமா உலகில்  உருவாக்கப்பட்ட 'பாகுபலி' இந்தியா முழுவதும் பெற்ற வெற்றி, இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்திருப்போம்!!!      

 

 

சார்ந்த செய்திகள்