இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவ ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதலில் திரையரங்குகளில் வெளியாகும், அதன்பிறகு தான் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.