இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு டீசரில் விக்ரம் டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு 'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் சோழர்கள் வாழ்ந்த விதம் பற்றியும், அவர்கள் செய்த சாதனை சிலவற்றையும் வரலாற்றாசிரியர், எழுத்தாளர் உள்ளிட்ட சிலர் விவரிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.