மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் கடந்த 6 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 'அக நக...', 'வீரா ராஜ வீர...', 'சிவோஹம்...', 'பொன்னியின் செல்வன் ஆந்தம்' ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் ட்விட்டரில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் (குந்தவை, அருண்மொழி வர்மன்) என்ற பெயரை தங்களது பக்கத்தில் மாற்றி வைத்திருந்தனர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு புதிய விதிகளின் படி ப்ளூ டிக் வாங்கிய அக்கவுண்ட் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் எடுக்கப்படும். இதனால் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. பின்பு மீண்டும் தனது ஒரிஜினல் பெயரை மாற்றியுள்ளார் த்ரிஷா.
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டின் போதும் இதே போல் தங்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர்கள் மாற்றியிருந்தனர். ஆனால் இப்போது த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி பெயர்களை மாற்றி ப்ளூ டிக் நீக்கியுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் பெயரை மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.