லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி, தேங்காய் உடைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதலில் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்பு 9 மணிக்கே தொடங்கப்படவுள்ளதாக அறிவித்தது. அதன்படி 9 மணிக்கே புதுச்சேரியிலும் முதல் காட்சி தொடங்கியது.
ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்கு முன் திரண்டு பட வெளியீட்டைக் கொண்டாட ஆரம்பித்தனர். அதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ரசிகர்கள் அவர்களது மோட்டார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு திரையரங்கிற்குள் சென்றுவிட்டனர். இதனிடையே சாலை விதிகளை மீறி ரசிகர்கள் நிறுத்திய வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த ரசீதை 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வைத்துள்ளனர். இதனால் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் அபராதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சென்னையிலும் குரோம்பேட்டை திரையரங்கில் ரசிகர்களுக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.