‘களவாணி’, 'களவாணி 2', ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விமல். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விமல் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் கோபி என்பர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "கடந்த 2016 ஆம் ஆண்டு மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்ததாகவும், அதற்கு நீங்கள் பணம் தந்து உதவ வேண்டும் எனக் கோரினர். மேலும் படத்தின் லாபத்திற்கான பங்கையும் தருவதாக உறுதியளித்தார். இதனை நம்பி நடிகர் விமலிடம் ரூ. 5 கோடி கொடுத்தேன். வாங்கிய பணத்தை வெளியீட்டுக்கு முன்பாகவே கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் பணத்தை கொடுக்காமல் என்னை ஏமாற்றி வருகிறார். பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 1.30 கோடி பணத்தை கொடுத்தார். மீதமுள்ள பணத்தை 6 மாத காலத்திற்குள் தருவதாக கூறினார். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த விமல் பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விமல் ரூ. 3 கோடி தருவதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் அதையும் சொன்னபடி கொடுக்கவில்லை. இது குறித்து விமலிடன் கேட்டபோது கொலை மிரட்டல் விடுகிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்படி வாடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.