சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியானது. கவர்ச்சியாக உடை அணிந்து தீபிகா படுகோனே நடனமாடியிருக்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை மாற்றுமாறு பதான் படத்தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, “ஷாருக்கானை நான் நேரில் பார்த்தால் உயிரோடு அவரை எரித்து விடுவேன். இல்லை, வேறு யாராவது எரித்தால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன்” என்று கூறினார். "ஷாருக்கானை நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும்" என்று பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எச்சரித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி திரைப்படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்றதாக சொல்லப்படும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் போது, "நாம் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம். சிலர் சில திரைப்படங்களைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை கூறுவதால், அது ஊடகங்களில் பேசும் பொருளாக மாறுகிறது. அதனால் நம் கடின உழைப்பை மறைக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்" என மோடி கேட்டுக்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி பதான் படத்தை குறிப்பிடாத நிலையில், பா.ஜ.க தலைவர்கள் சமீபத்தில் பதான் படம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தது அனைத்து ஊடகங்களில் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.