தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.
தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.
சமீபத்தில் காஜல் அவகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், மாப்பிள்ளை பெரிய தொழிலதிபர் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்தது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது திருமணம் குறித்த செய்தியை உறுதி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் காஜல் அகர்வால். தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை வருகிற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.