விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என 2 தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். 2 தரப்பு மனுவும் தனித்தனியே விசாரணைக்கு வந்தபோது அம்மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்பு இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே தமிழ்நாடு உளவுத்துறை, கேரளாவில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என தெரிவித்து இப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை செய்தது. இந்த நிலையில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்ஷன் என்பவர் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கேரளாவைச் சேர்ந்த ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரம், பாத்திமா பா என மதம் மாறி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியாக உருவாகியுள்ளதாகவும் தன்னைப்போல மதம் மாற்றப்பட்ட 32 ஆயிரம் பெண்கள் சிரியா, ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் கூறுகிறது.
மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்கும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியிருந்தேன். மேலும், இந்தியாவில் இருந்து எத்தனை இந்து பெண்கள் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு விற்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போது ‘காவல்துறை மற்றும் பொது அமைதி என்பது மாநில விவகாரம்’ எனப் பதிலளிக்கப்பட்டது. இதன் மூலம் தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்ட தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நிரூபணம் ஆகியுள்ளது. படத்தின் டீசரை தணிக்கை சான்றிதழ் வாங்காமல் சட்டவிரோதமாக சன்சைன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அதனால் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை தடை செய்யக் கோரி தமிழக முதல்வர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவை அவமானப்படுத்தும் வகையிலும், அமைதியை விரும்பும் இந்தியாவை, உலகிலேயே தீவிரவாதிகளை உருவாக்கும் நாடாக சித்தரிக்கும் வகையிலும் படம் உருவாகியுள்ளது. இந்திய இறையாண்மைக்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து, நாட்டில் உள்ள பொது அமைதியை இப்படம் கெடுக்கும். எனவே, இந்தப் படத்தை வெளியிட முழுமையாக தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.