நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. குடும்பக் கதைகளுடன், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.
விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும்போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவியுள்ளார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது. சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார். கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் விஜயகாந்த் நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்” என்றார்.