சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 2023 - சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைந்துள்ள நிலையில் புத்தக விரும்பிகள் வழக்கம் போல வந்து குவிகின்றன. ஆண்டுதோறும் பலரது கவனத்தை ஈர்த்து வரும் இந்த புத்தக கண்காட்சியில் இந்த முறை கூடுதல் கவனத்தை ஈர்த்தது அரங்கு எண்.286ல் இருக்கும் 'கூண்டுக்குள் வானம்'.
சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், சிறை கைதிகளுக்கு பயன்படும் வகையில் தானமாக புத்தகம் பொதுமக்கள் கொடுத்தால் அதை கைதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புது முயற்சிக்கு பலரும் தங்களது புத்தகங்களை தானமாக வழங்கி வரும் நிலையில் வித்தியாசத்துக்கு பேர் போன இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் ஒரு செயலை செய்துள்ளார்.
இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் ஒவ்வொரு அரங்காக சென்று சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி மடிப்பிச்சை கேட்டுள்ளார். பின்பு சேகரித்த புத்தகங்களை 'கூண்டுக்குள் வானம்' அரங்கில் கொண்டு சேர்த்தார். பார்த்திபனின் இந்த செயல் அங்கிருந்தோரின் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.