Skip to main content

”இந்த மாதிரியான படங்களுக்கு உலக அளவில் பெரிய மார்க்கெட் உள்ளது” - பா.ரஞ்சித் பேச்சு

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Pa.Ranjth

 

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான சேத்துமான் திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “எனக்கு மாற்று சினிமாக்கள் மீது எப்போதும் பெரிய ஆர்வமுண்டு. சுயாதீன படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சுயாதீன படங்களில் ஒருவித சுதந்திரத்தன்மை இருக்கும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னால் அது மாதிரியான படங்களை இயக்க முடியவில்லை. சரி, இந்த மாதிரியான படங்களைத் தயாரிக்கலாம் என்று நினைத்தபோதுதான் இயக்குநர் தமிழை சந்தித்தேன். சேத்துமான் கதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். இயக்குநர் தமிழை பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்றாலும்கூட அந்தக் கதை மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது.

 

போட்ட காசை எடுத்துவிடலாம் என்பது மாதிரியான நம்பிக்கையை இந்தக் கதையின்மீது வைக்க நான் விரும்பவில்லை. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு அங்கிருக்கும் வரவேற்பைப் பொறுத்து எப்படி ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவெடுத்துக்கொள்ளாம் என்று நினைத்தோம். படத்தின் இயக்குநர் தமிழிடம் அரசியல் பேசுவதில் ஒரு தெளிவு இருக்கிறது. சிறப்புக்காட்சியில் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். தொடர்ந்து நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சேத்துமான் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இடம்பெறும்.

 

சினிமா என்பது பெரிய முதலீட்டில் எடுக்கப்படும் படம் மட்டுமல்ல. இந்தப் படம் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டு இன்று லாபகரமான படமாக மாறியிருக்கிறது. படமெடுக்க வேண்டும் என்று நினைக்கிற இளைய தலைமுறையினர் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திகொள்ள வேண்டும். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு திரையிடப்பட்ட படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் அல்ல. நல்ல கதையம்சத்துடன் கூடிய குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான் அங்கு அதிகமாக திரையிடப்பட்டன. சுயாதீன படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியிருக்கிறது. இந்த மாதிரியான படங்கள் பண்ண விரும்புகிறவர்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாம். அந்த மாதிரியான கலைஞர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியதை முக்கியமான தேவையாக நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்