கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு ஆட்சியிலுள்ள பாஜக, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் 3 சீட்டுகள் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரைப்படம் இயக்குவதைத் தாண்டி அரசியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவு குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேஜிஎஃப் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து வீடியோ வெளியிட்டுள்ள பா.ரஞ்சித், "நம்மிடம் கட்சி சார்ந்து குழு சார்ந்து அல்லது தெருக்கள் சார்ந்து பல்வேறு முரண்பாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் தவிர்த்து நமக்கென ஒரு அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கு ராஜேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும். ஏற்கனவே நம்மிடம் இருந்ததை இழந்து கொண்டு இருக்கிறோம். அதைத் திரும்ப மீட்க வேண்டும் என்கிற கட்டாயம் கேஜிஎஃப் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. நம்முடைய அரசியல் உரிமையைப் பெற ராஜேந்திரனை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது" என்றார்.
இதையடுத்து தமிழக அரசியல் குறித்தும் ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு, "கவர்னருடைய வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் ஆர்.என்.ரவி பார்த்து வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் அவர் பேசுகிறார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு கருத்துகளை பொது சமூகத்தில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அது தவறு தான். அது மிகவும் கவலையளிக்கிறது" என்றார்.
ரோகிணி திரையரங்கில் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்காதது தொடர்பான கேள்விக்கு, “இது போன்று பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு தான் இதில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். வேங்கைவயல் சம்பவம் குறித்த கேள்விக்கு, "பொதுவான தொட்டி அமைப்பதற்கு தான் எல்லாரும் விருப்பப்படுகிறோம். ஆனால், அதில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் தனியாகக் கொடுங்கள் என்று கோரிக்கை பிறக்கிறது. ஆனால், பொதுவாக அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை" என்றார்.