Skip to main content

"கங்கனாவை பார்த்தால் அறைவேன்" - நடிகை ஆவேசம்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Pakistani actor Nausheen Shah says she wants to slap Kangana Ranaut

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லாது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15 ஆம் தேதியன்று தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதில் பல கருது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் கங்கனா குறித்து பாகிஸ்தான் நடிகை தற்போது பேசியுள்ளார். அவர் கங்கனாவை நேரில் பார்த்தால் அறைவேன் என கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பாலிவுட்டிலிருந்து எந்த நடிகரை நீங்க பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கங்கனா ரணாவத்தை சந்திக்க விரும்புகிறேன். அப்படி சந்தித்தால் அவரை இரண்டு அறை அறைவேன். என் நாட்டைப் பற்றி அவர் சொல்லும் விதம், பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி அவர் நிறைய பொய் சொல்லும் விதம், அவருடைய துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் அவருக்கு சுத்தமாக எதைப் பற்றியுமே புரிதல் இல்லை. ஆனால் நாட்டைப் பற்றி பேசுகிறார். அதுவும் வேறொரு நாட்டைப் பற்றி. 

 

உங்கள் சொந்த நாட்டில் கவனம் செலுத்துங்கள், உங்கள் நடிப்பில் கவனம் செலுத்துங்கள், உங்கள் இயக்கத்தில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தானில் மக்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்கள் ஏஜென்சிகளைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? அது எங்களுக்கே தெரியாது" என கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்