மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.