இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் டாக்டர் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் டாக்டர்.அம்பேத்கர் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் சமூகவலைத்தளப்பதிவில்,“பாபாசாகேப் அம்பேத்கரை நோக்கி வீசப்பட்ட வெறுப்பையும், புறக்கணிப்பையும், வன்மத்தையும் புறம்தள்ளி எவராலும் எக்காலத்திலும் வீழ்த்த முடியாத நம் மக்களின் அடிப்படை உரிமையைப் பெற, தன் வாழ்நாளின் கடைசி நொடி வரை தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த ஆற்றலையும் கொண்டு சமரசமின்றி களம் கண்டு வெற்றி பெற்றதை என்றும் நினைவில் ஏந்துவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீபகாலங்களில் தொடுக்கப்படும் வன்மங்களையும், அவதூறுகளையும், பிரிவினைவாத போக்கையும் தீவிரமாக எதிர்கொள்ள, பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை ஏந்தி சமரசமின்றி களம் காண அவரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம். ஜெய்பீம்” என்று குறிப்பிட்டுள்ளார்.