95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதில் இந்திய மொழி படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் குவித்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று மாநிலங்களவை கூட்டத்தொடரிலும் இரண்டு படக்குழுவினருக்கும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம் என்றோ, நாங்கள் தான் பாடல் எழுதினோம் என்றோ, நாங்கள் தான் கதை எழுதினோம் என்றோ, குறிப்பாக மோடிதான் இந்தப் படங்களை இயக்கினார் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு” என்றார். இது மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு பேசிய நரசிம்மராவ், “ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் எடுத்த படம். அவர்களுக்கு விருது கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூற, அடுத்து பேசிய மதிமுக தலைவர் வைகோ, “தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தவர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.
இப்படி வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறும் வாழ்த்துகள் மூலம் விவாதத்தைக் கிளப்பினர். பின்பு பேசிய சமாஜ்வாதி கட்சியை சார்ந்த நடிகையும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், அனைவரும் இந்தியர்களே எனப் பேசினார். அவர் பேசுகையில், "இந்த நாட்டின் மிக முக்கியமான பிரபலங்களைப் பற்றி நாம் விவாதிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், அவர்கள் சினிமா துறையைச் சார்ந்தவர்கள். அவர்கள் வடக்கோ கிழக்கோ தெற்கோ மேற்கோ என எங்கிருந்து வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால், அவர்கள் இந்தியர்கள். சத்யஜித் ரே தொடங்கி பல விருதுகள் வாங்கி இந்த நாட்டை பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்று பெருமைப்படுத்திய நமது திரையுலகச் சகோதரர்களுக்காக கண்ணியத்துடன் இங்கு நிற்கிறேன்." என்றார்.
மேலும் பேசிய அவர், "ராஜமௌலியின் நோக்கமும் அவரது தந்தை ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்தும் எனக்கு நன்றாக தெரியும். இது ஒரு ஆரம்பம் தான். விரைவில் மற்ற திரைப்படக் கலைஞர்களும் ஆஸ்கர் வாங்குவார்கள். சினிமாவின் மார்க்கெட் இங்கே இருக்கிறது, அமெரிக்காவில் இல்லை” என்று பேசி முடித்தார்.