உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டும் கோலாலமாகக் கொண்டாடப்பட்டது. இதுவரை ஆஸ்கர் விருது வெறும் கனவாக இருந்த இந்தியர்களுக்கு இந்தாண்டு 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் மூலம் சாத்தியமானது. சிறந்த பாடல் பிரிவில் தெலுங்கு பாடலான 'நாட்டு நாட்டு' பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் தமிழ் ஆவணக் குறும்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டிற்கான புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 398 கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சூர்யா, கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காக்டி உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் இணைந்தனர்.
அந்த வகையில் இந்தாண்டு 'ஆர்.ஆர்.ஆர்' பட பிரபலம் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிகர் பிரிவிலும் எம்.எம். கீரவாணி இசையமைப்பாளர் பிரிவிலும் செந்தில்குமார் ஒளிப்பதிவாளர் பிரிவிலும் மணிரத்னம் இயக்குநர் பிரிவிலும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாடலாசிரியர் சந்திர போஸ், ப்ரொடக்ஷன் டிசைனர் சாபு சிரில், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய் கபூர், கரண் ஜோகர், இயக்குநர் சைதன்யா தம்ஹானே, இயக்குநர் மற்றும் எடிட்டர் ஷானக் சென், விஎப்எக்ஸ் பணியாளர்கள் ஹரேஷ் ஹிங்கோராணி மற்றும் பி.சி. சனத், கிராந்தி சர்மா ஆகியோர் அவரவர் பணியாற்றும் துறை சார்ந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், "ஆஸ்கர் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன், ரோஜா, பாம்பே, தில் சே மேலும் பல... ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கிய, நாயகன், அஞ்சலி உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.