தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரத்பாபுவுக்கு இரங்கல் தெரிவிக்க ரஜினிகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் எப்போது சிகரெட் பிடித்தாலும் இது உடல்நலத்திற்கு கேடு என்று ரஜினியிடமிருந்து பிடுங்கிப் போட்டுவிடுவார் சரத்பாபு. அண்ணாமலை படத்தில் நடித்த போது சவால் விடுகிற காட்சியில் தொடர்ச்சியாக ஷாட் ஓக்கே ஆகாமல் நிறைய முறை ரீடேக் போய்க் கொண்டிருந்ததை கவனித்த சரத்பாபு. ஒரு சிகரெட் கொண்டு வரச் சொல்லி இதை குடி என்றிருக்கிறார். பிறகு ஷாட் ஓக்கே ஆகியிருக்கிறது.
மேலும், இன்று என்னுடைய நெருங்கிய நண்பர் அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.