சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன்.
ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க.
இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.