நடன இயக்குநராக சின்னத்திரையிலும், நடிகராக பெரிய திரையிலும் வலம் வரும் நிவாஸ் ஆதித்தன் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சுமார் 22 வருடத்திற்கு முன் காரைக்காலில் இருந்து எல்லோரைப் போலவும் பெரும் கனவுடன் பத்தொன்பது வயதில் சென்னைக்கு வந்தேன். இங்கு ஆட்டோ ஓட்டியிருக்கேன், வாட்ச்மேன் வேலை பார்த்திருக்கேன். சிறுவயதில் இருந்து டான்ஸ் ஆடத் தெரியும் என்பதால் ஒரு பெரிய அகாடமியில் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மாறத் தொடங்கி இப்போது தான் பெரிய ஹோட்டல்களில் தங்குவது, வெளிநாட்டு பயணம் என வாழ்க்கை சிறப்பா இருக்கு.
சினிமாவில் சேர வந்துவிட்டு பாதை மாறுகிறோமோ என சிந்தித்துக் கொண்டே தொலைக்காட்சியில் டான்ஸ் சொல்லிக் கொடுக்க சேர்ந்தேன். இதன் தொடர்ச்சியாக, ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா ஆகிய நிகழ்ச்சிகள் என வாழ்க்கை வேறு மாதிரி போனது. பின்னர், அமராவதி செல்வா இயக்கத்தில் திரையில் அறிமுகமானேன்.
என் அப்பாவிற்கு சினிமாத் துறையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் என்னை கலைத்துறையில் ஈடுபடுத்த தயங்கினார். அப்பாவின் முந்தைய காலம், எம்.ஜி.ஆர். படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். ஆனால், அப்பாவிற்கான உரிய அங்கீகாரம் இன்றைக்கு இணையத்திலும் கிடைக்கவில்லை. இது போன்ற சில கசப்பான தருணங்களால், அவர் வைத்திருந்த சினிமா சார்ந்த ஆதாரங்களை எரித்து விட்டார். என்னோட விக்கிபீடியா சுய விவரத்தில் அவரை இணைக்கக் கூட ஆதாரங்கள் என்னிடம் இல்லை.
சும்மா சுற்றித்திரிந்த எனக்கு அவரோட நடிகர் சங்க பென்சனை கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். தரமணி படத்தில் நடித்தது வரை அப்பா பார்த்துள்ளார். அப்பாவிற்கு பையன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டது. எனது குடும்பத்தின் உதவியும் என்னுடய வெற்றிக்கு காரணம் என்பதை குறிப்பிட வேண்டும். அதிலும், அப்பா விட்டுச் சென்ற இடத்தை ஒருவர் நிரப்ப வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். எனவே, எனக்கு உறுதியான நம்பிக்கையையும் அவர் கொடுத்தார்.
சினிமாவில் நுழைந்த தொடக்கத்தில் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியதால் சில வருடம் வாய்ப்பு அமையாத சூழலும் உருவானது. பின்னர், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எடுத்து நடிப்போம் என்று முடிவெடுத்தேன். என்னவானாலும் அந்த நாளின் இறுதியில் நாம் சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருந்தது. எனவே, இதன் தொடர்ச்சியாக, சித்திரம் பேசுதடி 2ம் பாகத்திலும் ஒரு ஹீரோவாக நடித்திருந்தேன். அடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மூலம் காக்கா முட்டை பட வாய்ப்பும் வந்தது.
செல்கிற பாதைகள் வேறாக இருந்தாலும் அடைகிறது கோவில் என்பார்கள். அதுபோன்று தான் சினிமாவிலும், ஒவ்வொருத்தருக்கு தனித்தனி பாதை உண்டு. அவர் பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வழியில் அனைவரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியில், இறைவனிடம் தான் அனைத்தும் உள்ளது.