நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், அவர் வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல் போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அதே செவிலியர் விக்னேஷ் சிவனுக்கு தடுப்பூசி செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் சில நயன்தாரா ரசிகர்கள், அதில் அந்த செவிலியர் ஊசியைப் பிடித்துள்ள விதத்தைச் சுட்டிக்காட்டி, நயன்தாராவிற்கு அந்த செவிலியர் தடுப்பூசி போட்டபோதும் ஊசியை உட்புறமாகப் பிடித்திருந்ததால்தான் புகைப்படத்தில் அது தெரியவில்லை எனக்கூறி விளக்கமளித்து வருகின்றனர்.