இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 22வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதியிலிருந்து 19 தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ் திரைப்பட பிரிவில் 27 படங்கள் திரையிடப்பட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படமும் திரையிடப்பட்டது.
இந்த விழாவில் மாஸ்டர் கிளாஸ்சஸ் மற்றும் உரையாடல் என்னும் நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “ஒட்டுமொத்தமாக 100 சதவிகிதம் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தில் 25 சதவிகித மக்கள் தொடர்ந்து சமூக விலக்கம் பெற்ற மக்களாகவும் ஊர் என்ற அமைப்புக்குள் இருந்து வெளியே இருக்கும் மக்களாகவும் இருந்தார்கள். நான் ஏன் வெளியே இருக்கிறேன் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. பல சாதி அமைப்பு இருக்கும் ஊரில் நானும் இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வி எனக்கு முக்கியமாக இருந்தது. இந்த கேள்விக்கான பதிலை பல இடங்களில் தேடியிருக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தின் மூலமாக என்னுடைய கேள்விகளுக்கு நிறைய விடைகள் கிடைத்தது. அதன் பிறகு நான் யார் என்பதை மக்களிடம் விவாதிக்க நினைத்தேன். அதன் தொடர்ச்சியாக தவிர்க்கப்பட்ட உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களை சினிமாவில் உருவாக்க முடிவு செய்தேன். கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்போதே இந்த சவாலான விஷயத்தை எடுக்க முடிவெடுத்தேன்.
அதன் பிறகு நான், உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி போகும்போது, சீரியஸான சினிமா பற்றிய அக்கறை இல்லாத ஆட்களைச் சந்தித்தேன். அவர்கள் புத்தகம் படிப்பவர்களை தள்ளி வைத்தார்கள். உலக சினிமா பார்ப்பவர்களை அந்த நேரத்தில் மண்ட வீங்கி என்று சொல்வார்கள். உலக சினிமாக்களை பார்த்துவிட்டு அதைப் பற்றி பேசினால், ரொம்ப அறிவுப் பூர்வமாக யோசிப்பார்கள் என்றும் கமர்சியல் சினிமா எடுக்கத் தெரியாது என்றும் பேசுவார்கள். இந்த சிக்கல்களுக்கிடையில் ஒரு முறை சூதாடி புத்தகம் படிக்கும்போது, என்னுடைய இயக்குநர் கேவலமாக கமெண்ட் அடித்துவிட்டுச் சென்றார். அது வெங்ட் பிரபு கிடையாது. அவர் மிகவும் நேர்மையாக என்னைப் புரிந்துகொண்டவர். நான் சொன்ன உரையாடல்களைப் பேசக்கூடிய ஆட்களைத் தேடிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். அப்போது என்னுடைய வாழ்க்கை சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. அதன் பிறகு என்னையே நான் ட்ரைன் பண்ணிக்கொண்டு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இணைந்தேன்.
அப்போது வெங்கட் பிரபு அவருடைய முதல் படத்தில் பணியாற்றி எனக்கு வாத்தியாராக இல்லாமல் மாணவனாக இருந்தார். ஸ்கிரிப்ட் ரைட்டிங் மற்றும் படம் எடுப்பதில் என்னுடைய உதவி அவருக்கு தேவைப்பட்டது. அங்கு எங்களுடைய பங்களிப்பு அதிகமாக இருந்ததால் சென்னை 28 திரைப்படம் ஏற்கனவே எடுத்த சினிமாக்களில் இருந்து விலக்கம் பெற்று வெற்றிகரமாக ஒடியது. அது எனக்கு மகிழ்ச்சியாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தது. பின்பு சரோஜா, கோவா ஆகிய படங்களில் பணியாற்றிய பிறகு நான் திரைப்படம் எடுக்க முடிவெடுத்தேன்.
நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது எனக்கிருந்த காதல் அனுபவங்களை மையப்படுத்தி மஞ்சள் என்ற தலைப்பில் கதை எழுதினேன். அதில் சாதி எப்படி வந்தது என எல்லாமே இருந்தது. படம் எடுப்பதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகளை கேலிகளுக்கு உட்படுத்த கூடாது, பெண்களை மலினமாகவும் மோசமாகவும் காட்சிப்படுத்தக் கூடாது, திருநங்கைகளைத் தவறாக காட்சிப்படுத்தக்கூடாது, நிறம் தொடர்பான பாகுபாடு இருக்கக் கூடாது என எனக்கு நானே சில பொறுப்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். அதனால் எனக்கு குழதைப் பருவ காதலை சொல்லலாமா? வேண்டாமா? என்ற பிரச்சனை இருந்தது. அதன் பின்பு கல்லூரி காலத்து என்னுடைய நண்பர்களின் கதைகளை ஒன்று சேர்த்து அட்டக்கத்தி என்ற படத்தை உருவாக்கலாம் என்று தோன்றியது. அந்த படத்தில் பட்டியலின சமூக மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தலாம் என்று முடிவெடுத்து படமெடுத்தேன்” என்றார்.