பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணி, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணியை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர், படத்தை குறித்தும் தன் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நேர்காணலில் சங்கமித்ரா செளமியா அன்புமணி பேசுகையில், “என்னுடைய பெயர் முதலில் ஏ.சங்கமித்ரா என்றுதான் இருந்தது. நான் 2ஆம் வகுப்பு படிக்கும்போது, தாத்தா சொன்ன காரணத்தினால் அப்பா என்னுடைய பெயரை சங்கமித்ரா செளமியா அன்புமணி என்று மாற்றினார். இப்போது வீட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் அம்மா, அப்பா பெயருடன் சேர்ந்துதான் அவர்கள் பெயர் வரும். முதல் உரிமை குழந்தையின் அம்மாவுக்குத்தான் இருக்கிறது எனப் பெயர் வைப்பதை மாற்றச் சொன்னது தாத்தாவும் அப்பாவும்தான்.
தமிழ் மொழி முக்கியத்துவம் குறித்து ராமதாஸ் தாத்தா பேசி வருகிறார். ஆனால், என்னுடைய பெயர் ஏன் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? என நிறைய விமர்சனங்கள் வரும். அதை நினைத்து என்னுடைய அம்மா வருத்தப்படுவார். ஏனென்றால் தான் பெயர் வைத்ததால்தான் இப்படி விமர்சனம் வருகிறது. தாத்தா பெயர் வைத்திருந்தால் தமிழ்ப் பெயர்தான் வைத்திருப்பார் என்று சொல்லுவார். ஆனால் தாத்தா, முதல் உரிமை தாய்க்குத்தான். தாய் என்ன பெயர் வைத்தார்களோ அதுதான் என்று சொல்லுவார். நான் அலங்கு படம் எடுக்க காரணம் அவர்கள் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்.