உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் மக்கள் தேவையின்றி வெளியேறக் கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் கரோனா வைரஸ் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறது. வந்தேறிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது#StayHome” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் நவீன் தற்போது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்டோரை வைத்து அக்னிச் சிறகுகள் என்றொரு படத்தை ரஷ்யாவில் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.