Skip to main content

“தலைமை மருத்துவரிடம் பேசினோம்” - விஜயகாந்த் உடல் நலம் குறித்து நாசர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

nassar about vijayakath health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது நாசர் பேசுகையில், “கேப்டன் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுது. கொஞ்ச நாளாக வெளியான செய்திகளெல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை பார்த்தோம். அவரும் நல்லாயிருப்பதாக சொன்னார். அதனால் மிகைப்படுத்தின செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்