பல வருட சினிமா ஓய்விற்கு பிறகு முத்துராமலிங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் நெப்போலியன். தற்போது கிறிஸ்துமஸ் கூபன் என்கிற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய இரண்டாவது ஆங்கிலம் படம்.
தமிழ் திரையுலகில் நடித்து வந்த நெப்போலியன் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அரசியலில் எம்.பி, எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் என்று பல அரசாங்க பதவிகளை வகித்திருக்கிறார். தற்போது அரசியல் பயணத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் சினிமாவிற்கே திரும்பியுள்ளார். அதுவும் ஹாலிவுட் சினிமாவரை சென்றுவிட்டார்.
நெப்போலியனை போல் வெளிநாட்டில் ஐடி நிறுவனம் செய்யும் அவருடைய நண்பர் பெல் கணேஷன் தயாரித்துள்ள இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். ஐஸ் ஹாக்கி விளையாடும் வீரர் குறித்த குடும்ப கதையில் நெப்போலியன் அவருடைய ஏஜெண்ட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நிருபர்களை சென்னையில் சந்தித்த நெப்போலியன் இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது, “என்னைப்போல் தயாரிப்பாளர் பெல் கணேசனும் அமெரிக்காவில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னிடம் வந்து நான் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்போகிறேன். அதில் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன்.
என்னை தவிர இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். இந்த படத்தில் நான் ஒரு விளையாட்டு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் ஒரு மணி 35 நிமிடங்கள் ஓடும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்துள்ளது. நடிகர் சங்கத்தில் தலைவராக விஜயகாந்தும், செயலாளராக சரத் குமாரும், துணைத்தலைவராக நானும் இருந்தபோது நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருந்தது. சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி இருக்கக்கூடாது. நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். இப்போது எந்த கட்சியிலும் இல்லை” என்று கூறியுள்ளார்.